காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, திமுக எஸ்ஐஆர் (சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல்) திருத்தத்துக்கு எதிர்ப்பது அவர்களுடைய அரசியல் அச்சத்தால் என்றார்.
அவர் கூறியதாவது:
- “டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு, கடந்த 11 ஆண்டுகளில் ஜம்மு–காஷ்மீருக்கு வெளியே நடந்த முதல் சம்பவம். ஆனால் நாட்டின் பாதுகாப்பு குறித்து சிறிதளவுக்கும் அக்கறை இல்லாத திமுக, விசிக போன்றக் கட்சிகள், வாக்கு வங்கி அரசியலுக்காக தவறான கருத்துகளை பரப்புகின்றன.”
- 15 கிலோ வெடிப்பொருள் மட்டும் வெடித்திருந்தாலும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறி, “பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2,900 கிலோ வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருந்தால் நிலைமை எப்படியிருக்கும்?” என அவர் கேள்வி எழுப்பினார்.
- மிகப்பெரிய தாக்குதலை தடுக்க பிரதமர் மோடி மற்றும் தேசிய உளவுத்துறையினர் பெரும் பங்கு வகித்துள்ளனர் என்றும், எனினும் திமுக–விசிக போன்ற கட்சிகள் மத்திய அரசை குறை கூறி தேசவிரோதமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்துகின்றன என்றும் விமர்சித்தார்.
- “ராணுவம் பயன்படுத்தும் ஆர்டிஎக்ஸ் 363 கிலோ பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டுள்ளது. இதற்குப் பின்னால் வெளிநாட்டு சதி இருக்கலாம். இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற திமுக கூட்டணி கட்சிகள் குரல் கொடுக்கின்றன” என்றார்.
- தமிழகத்தில் எஸ்ஐஆர் படிவங்களை திமுகவினர் திரளாக வாங்கிச் செல்வதாக குற்றம் சாட்டிய அவர், “தோல்வி பயத்தால் திமுக இந்த சிறப்பு தீவிர பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. 2026-ல் திமுக ஆட்சி மாற்றப்பட வேண்டும்” என்றார்.
- பிஹாரில் எஸ்ஐஆர் திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய காங்கிரஸ் அங்கு 10 சீட்டுகளிலும் வெற்றி பெற முடியாது என்றும், இந்த திருத்தத்தால் பிஹாரில் வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்திருந்தது என்றும் தெரிவித்தார்.
- “ஜம்மு–காஷ்மீர் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தபோது பயங்கரவாதச் சம்பவங்கள் இல்லை. புதிய அரசு அமைந்தபின் அவை அதிகரித்துள்ளன. ஏன் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் பயங்கரவாதிகளாக உருவாகிறார்கள் என்பது குறித்து ப. சிதம்பரம் பதிலளிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.