திமுக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் துதி எழுத்தாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் சென்னையில் நடந்த மகளிரணி மாநில நிர்வாகிகளின் சந்திப்பு, கலந்துரையாடலாகத் தொடங்கி “பாட்டரங்கம்” ஆக முடிந்தது. பிங்க் நிற சேலை அணிந்து பங்கேற்ற மகளிரணி உறுப்பினர்கள் பாடிய பாடல்கள், நிகழ்ச்சியின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கின. தற்போது இந்த நிகழ்வின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த நிகழ்வின் பின்னணி குறித்து, திமுக மகளிரணி டெல்டா மண்டலப் பொறுப்பாளர் மற்றும் சேலம் முன்னாள் மேயர் ஜெ. ரேகா பிரியதர்ஷினி கூறியதாவது:
“திமுக முப்பெரும் விழாவில், கனிமொழி அக்காவுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது. அதற்குப் பாராட்டாக, சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அக்டோபர் 12ஆம் தேதி ‘மகளிரணி நிர்வாகிகள் சந்திப்பு’ நடத்தினோம். இதில் மாநில தலைவர் விஜயா தாயன்பன், மகளிர் தொண்டரணி, பிரச்சாரக்குழு, வலைதளப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 30 பேர் பங்கேற்றனர்.
ஆரம்பத்தில் அரசியல் பேச்சுகள் எதுவும் இல்லாமல், சுமூகமான உரையாடலாகவே இருந்தது. அப்போது நாமக்கல் ராணி, ‘ரேகா நல்லா பாடுவாங்க’ என்று சொன்னபோது, கனிமொழி அக்கா ‘அப்படியென்றால் பாடுங்க!’ என்றார். நான் உடனே ‘தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ…’ பாடலைப் பாடினேன். அக்கா அதை ரசித்து தாளம் போட்டு, கைதட்டி பாராட்டினார்.”
அதன்பின், சேலம் சுஜாதா “காலைக் கனவினில் காதல் கொண்டேன்” என்ற பாடலை பாடியதாகவும், சிலர் கவிதைகள் வாசித்ததாகவும் ரேகா கூறினார்.
“எங்களின் பாடல்களால் அக்கா ரொம்பவே உற்சாகமடைந்தார். மாநில தலைவர் விஜயா தாயன்பன் இசைக்குழு நடத்துபவர் என்பதால், அக்கா அவரை பார்த்து ‘உங்களுக்குப் போட்டியாக புதிய பாடகர்கள் வந்துவிட்டார்கள் போல!’ என்று சிரித்தபடி சொன்னார்,” என்றார் அவர்.
இசை, நகைச்சுவை, உரையாடல் என இரண்டு மணி நேரம் மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியில் கனிமொழி,
“அனைவரும் ஒற்றுமையாய் இருக்க வேண்டும். உங்களுக்கு முன் நிறைய பொறுப்புகள் காத்திருக்கின்றன; அவற்றை உறுதியாகச் செய்யுங்கள்,”
என்று அறிவுரை கூறியதாகவும் ரேகா தெரிவித்தார்.
பொதுவாக அரசியல் நிர்வாகிகள் சந்திக்கும் நிகழ்வுகள் குற்றச்சாட்டுகள் அல்லது கோஷ்டி அரசியல் நிறைந்ததாகவே இருக்கும் நிலையில், திமுக மகளிரணியின் இந்த சந்திப்பு அரசியல் பேச்சில்லாமல் சிரிப்பு, பாடல், ஒற்றுமை நிறைந்த பாட்டரங்கமாக முடிந்தது என்பதே இந்நிகழ்ச்சியின் சிறப்பாகும்.