புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே இன்று (நவம்பர் 13) பிற்பகல் சிறிய ரக போர் விமானம் அவசரமாக தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கியது, இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்லும் முக்கிய சாலை ஆகும். இன்று பிற்பகல் அந்தப் பாதையில் பறந்துகொண்டிருந்த சிறிய ரக போர் விமானம், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறின் காரணமாக அவசரமாக சாலையில் தரையிறங்கியது.
அந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து அல்லது உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. விமானத்தில் இருவர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் அறிந்ததும் கீரனூர் போலீஸார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். பொதுமக்கள் திரண்டு கண்டு ரசித்ததால், போலீஸார் விமானம் அருகே யாரையும் அணுக விடாமல் அனுப்பி வைத்தனர்.
விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்ய தஞ்சாவூர் விமான நிலையத்திலிருந்து தொழில்நுட்ப நிபுணர்கள் உடனடியாக புறப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியும் ஆர்வமும் ஏற்படுத்தியுள்ளது.