நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி பகுதியில் உள்ள தனியார் டீ எஸ்டேட் கிணற்றில் அழுகிய நிலையில் புலி சடலம் கண்டெடுக்கப்பட்டு, வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சூழலியல் முக்கியத்துவம் மிக்க நீலகிரி மலைப்பகுதியில் அண்மைக் காலமாக வனவிலங்குகளின் இயற்கைக்கு மாறான இறப்புகள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக உள்ளது. இதனிடையே, பாதுகாக்கப்பட்ட வனவிலங்கான புலியின் சடலம் கிணற்றில் கிடைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கீழ் கோத்தகிரி வனச்சரகம் உட்பட்ட அஞ்சனகிரி டீ எஸ்டேட்டில் புதிதாக தோண்டப்பட்ட சுமார் 20 அடி ஆழமுள்ள கிணற்றில் துர்நாற்றம் வீசியதை அடுத்து, அப்பகுதி மக்கள் எட்டிப் பார்த்தபோது புலி ஒன்று இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதையடுத்து, வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழுகிய நிலையில் இருந்த புலி சடலத்தை மீட்டனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
“இந்த பகுதியில் வழக்கமாக நடமாடி வந்த புலி ஒன்று தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. இறந்த புலியின் வயது, பாலினம் மற்றும் துல்லியமான இறப்பு காரணம் குறித்து உடற்கூறாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், டீ எஸ்டேட் நிர்வாகத்திடம் விளக்கம் கோரி விசாரணை நடைபெற்று வருகிறது,” என்றனர்.