செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் பணிபுரிந்து வந்த கணக்காளர் விஜயன், திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அந்தக் கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தணிக்கை துறையினர் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்தனர். அதில், வருவாய் பதிவுகளில் சில குளறுபடிகள் இருப்பதாக தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கோயில் நிலங்களில் அரசு சார்பில் நடைபெறும் திட்டப் பணிகளைப் பற்றியும் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகத்தினருக்கிடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாக கோயிலில் பணியாற்றி வந்த விஜயன், நிர்வாக காரணங்களுக்காக கடலூர் மாவட்டம் பிரளயகாலேஸ்வரர் கோயிலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தணிக்கை ஆய்வுக்கு பிறகு கணக்காளர் மாற்றம் செய்யப்பட்டிருப்பது, திருக்கழுக்குன்றம் கோயில் நிர்வாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.