டெல்லியில் வெடி தாக்குதல் நடப்பதற்கு முன்பு, டாக்டர் உமர் முகமது தனது காரில் 3 மணி நேரம் இறங்காமல் இருந்தது குறித்து புலனாய்வு அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். அந்த காரை ஓட்டி வந்த டாக்டர் உமர் முகமது, தானே வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
சிசிடிவி பதிவுகள் வெளிப்படுத்திய தகவல்கள்
பரிதாபாத் முதல் டெல்லிவரை சுமார் 1000க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அதன் படி, உமர் முகமது ஓட்டிச் சென்ற ஹூண்டாய் i20 கார் டெல்லிக்குள் நுழைந்து மயூர் விஹார், கன்னாட் பிளேஸ் வழியாகச் சுற்றியதுடன், பழைய ஆசப் அலி சாலையில் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது காரில் உமர் ஒருவரே இருந்தார்.
பின்னர் அவர் செங்கோட்டை பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தி, மூன்று மணி நேரம் அதே இடத்தில் இருந்ததாகவும், அந்த நேரத்தில் காரை விட்டு வெளியே வரவோ, வேறு யாரையும் சந்திக்கவோ இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் திட்டத்தில் குழப்பமா?
உமர் டெல்லியில் காலை 8 மணியளவில் நுழைந்து, சுமார் 11 மணி நேரத்துக்குப் பிறகு கார் வெடி தாக்குதல் நடந்துள்ளது. மயூர் விஹார் வழியாக அக்ஷர்தாம் கோயிலுக்கு அருகே சென்றும், பின்னர் திடீரென பாதையை மாற்றி கன்னாட் பிளேஸுக்கு சென்றதும், தாக்குதல் இடம் குறித்து அவர் குழப்பமடைந்திருக்கலாம் என புலனாய்வாளர்கள் கருதுகின்றனர்.
அவர் காரை விட்டு 3 மணி நேரம் இறங்காமல் இருந்தது குறித்து —
- தாக்குதலுக்கான உத்தரவை யாரிடமாவது காத்திருந்தாரா?
- அல்லது எந்த இடத்தை குறிக்க வேண்டும் என்று உறுதியாக தெரியாமல் குழம்பியிருந்தாரா?
என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
புலனாய்வு கோணங்கள்
ஹரியானாவில் சமீபத்தில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டதும், மேலும் செங்கோட்டை பகுதியில் அந்த நாளில் விடுமுறை இருந்ததும் உமரை பதட்டமடையச் செய்திருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இறுதியில், அவர் செங்கோட்டை அருகே காரை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டதாக விசாரணை தெரிவிக்கிறது. இந்நிலையில், உமரை வழிநடத்திய கூட்டாளிகள் யார், தாக்குதலின் பின்னணி என்ன என்ற விவரங்கள் குறித்து NIA தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது.