பிரான்ஸ் அரசின் உயரிய ‘செவாலியே’ (Chevalier) விருது, பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர்,
“ஆக்ஸ்போர்டில் ஒளிரும் தந்தை பெரியாரின் ஓவியத்தைத் தந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோட்டா தரணிக்கு, பிரான்ஸ் அரசின் உயரிய அங்கீகாரமான ‘செவாலியே’ விருது அறிவிக்கப்பட்டிருப்பது நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது.
அரசு கவின் கலைக் கல்லூரியில் பயின்ற அவர், இந்தியாவில் இருந்து இவ்விருது பெற்ற சிறந்த ஆளுமைகளின் வரிசையில் இணைவது பெருமையளிக்கிறது. கலைக்கான அவரது சாதனைக்கு பாராட்டுகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தோட்டா தரணி, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மட்டுமின்றி பிரெஞ்சு மற்றும் இத்தாலிய திரைப்படங்களிலும் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். ‘நாயகன்’, ‘சிவாஜி’, ‘பொன்னியின் செல்வன்’ போன்ற படங்களில் அவரின் பிரம்மாண்ட செட்கள் பெரும் பாராட்டைப் பெற்றவை.
இந்நிலையில், நவம்பர் 13ம் தேதி சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நடைபெறும் நிகழ்வில், இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியெரி மாத்தோ அவரிடம் செவாலியே விருது வழங்க உள்ளார்.