டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறியதாவது:
“காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) ஆட்சிக் காலத்தில் மும்பையில் குண்டுவெடிப்பு நடந்தபோது, அப்போதைய உள்துறை அமைச்சர் தார்மீக பொறுப்பேற்று உடனடியாக ராஜினாமா செய்தார்.
ஆனால் இப்போது, நாட்டின் தலைநகரான டெல்லியிலேயே, அதுவும் அமித் ஷாவின் அலுவலகத்திற்கு அருகில் இப்படியான குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இது மிகக் கடுமையான பாதுகாப்பு பிழை. நாடாளுமன்றத்தில் பேசும் ஒவ்வொரு முறையும், ‘எங்கள் ஆட்சியில் கலவரங்களும் குண்டுவெடிப்புகளும் இல்லை’ என அவர் பெருமையாக கூறுவார். ஆனால் இப்போது, அவரது கண்முன்னே இத்தகைய சம்பவம் நடந்துள்ளது,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
“இந்த சம்பவத்துக்கான தார்மீக பொறுப்பை அமித் ஷா ஏற்று பதவி விலகுவது நியாயமானது. குண்டுவெடிப்பின் உண்மையான காரணங்களை வெளிக்கொணரும் வகையில், தெளிவான மற்றும் சுயாதீனமான விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும். விசாரணையின் முடிவுகள் நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும்,” என்றார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
“ஹரியானா தேர்தலில், வெளியான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் ஆட்சியையே கணித்தன. ஆனால் முடிவில் பாஜக ஆட்சிக்கு வந்தது. அதற்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம். அதேபோல பிஹார் முடிவுகளும் அதிகாரப்பூர்வமாக வரும் வரை காத்திருக்க வேண்டும்,” என தெரிவித்தார்.