டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் பணியில் தொய்வு: நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் வேதனை
தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதில் 80 சதவீதம் அறுவடைப் பணிகள் நிறைவடைந்துள்ளன. எனினும், எஞ்சியுள்ள வயல்களில் பல இடங்களில் மழைநீர் தேங்கியிருப்பதால் அறுவடைப் பணிகள் தடைபட்டு உள்ளன.
இந்நிலையில், கொள்முதல் நிலையங்களில் சாக்குகள் பற்றாக்குறை நிலவுகிறது. மேலும், ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பாததால், புதிய நெல்லை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
அதோடு, மழை காரணமாக நெல்லில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால் கொள்முதல் நிலையங்களில் நெல்லை ஏற்க மறுக்கப்படுகின்றது. இதன் விளைவாக, விவசாயிகள் தங்கள் நெல் மூட்டைகளைக் கொள்முதல் நிலையங்களின் வளாகங்களிலும் அருகிலுள்ள சாலைகளிலும் குவித்து வைத்து, வாரக்கணக்கில் காத்திருக்கின்றனர். பல நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன.
இந்த நிலைமையால், நெல்லை விற்று தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாட திட்டமிட்டிருந்த விவசாயிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். பலர் கடன் வாங்கி பண்டிகையை கொண்டாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
காட்டூர், கண்டிதம்பட்டு உள்ளிட்ட கொள்முதல் நிலையங்களில் 12 நாட்களுக்கும் மேலாக நெல் மூட்டைகளுடன் காத்திருக்கிறோம் என விவசாயிகள் கூறுகின்றனர். “12 நாட்களாக காத்திருந்தும் நெல்லை வாங்கவில்லை. இதனால் கடன் வாங்கி தீபாவளியைக் கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லை விற்க காத்திருக்கும் எங்களுக்கு இந்த தீபாவளி கசப்பாக மாறிவிட்டது,” என அவர்கள் வேதனை தெரிவித்தனர்.