வெடிகுண்டு மிரட்டல் வெளிநாட்டிலிருந்து வரவில்லை: சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம்
சென்னை நகரில் தொடர்ந்து வெளியாகும் வெடிகுண்டு மிரட்டல்கள் வெளிநாடுகளிலிருந்து அல்ல, இங்கிருந்தே யாரோ சிலர் புரளி கிளப்பும் நோக்கில் செய்து வருவதாக காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
நிருபர்களிடம் நேற்று பேசிய அவர், “சமீபகாலமாக நடிகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 7 மாதங்களில் சென்னையில் மட்டும் 342 மிரட்டல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் ‘டார்க் வெப்’ மற்றும் ‘விபிஎன்’ வழியே அனுப்பப்பட்டுள்ளன,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
“மிரட்டல்களின் தன்மை மற்றும் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை வைத்து பார்த்தால், வெளிநாட்டு தொடர்பு இருப்பது போல் தோன்றவில்லை. இங்கிருந்தே ஒருவர் அல்லது இருவர் இதற்குப் பின்னணியில் இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். இருந்தாலும் இதை எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.”
அதே நேரத்தில், நகரில் சட்ட ஒழுங்கு நிலைமை குறித்து அவர் கூறியதாவது:
“சென்னையில் தற்போது 4,979 ரவுடிகள் ஏ, ஏ பிளஸ், பி, சி என நான்கு வகைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள்மீது கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டதால் குற்றச்செயல்கள் குறைந்து வருகின்றன.
கடந்த ஆண்டு 102 கொலைகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இவ்வாண்டு அது 82 ஆக குறைந்துள்ளது. அதேபோல் செயின் பறிப்பு 35-இல் இருந்து 21 ஆகவும், செல்போன் பறிப்பு 275-இல் இருந்து 144 ஆகவும் குறைந்துள்ளது,” என்றார்.
பின்னணி:
நேற்று தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்துக்கு வந்த இ-மெயிலில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடு, சத்தியமூர்த்தி பவன் (காங்கிரஸ் அலுவலகம்), நடிகர்கள் அஜித், எஸ்.வி. சேகர், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரின் வீடுகள் என மொத்தம் 10 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.
உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் சம்பவ இடங்களுக்கு சென்று சோதனை நடத்தினர். நீண்ட நேர சோதனையின் பிறகும் சந்தேகப்படும்படி எந்தப் பொருட்களும் கிடைக்காததால், இது புரளி மிரட்டல் என உறுதி செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.