மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நான் நிதியமைச்சராக அல்ல, ஒரு பாஜக தொண்டராக செயல்படுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் அவிநாசிசாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டம் இன்று நடைபெற்றது.
நயினார் நாகேந்திரன் பேச்சு
கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிதியமைச்சருக்கு பாராட்டு விழா நடத்துகிறது. அந்த சங்கத்தின் தலைவர் விக்கிரமராஜாவின் மகன் தற்போது திமுக எம்எல்ஏ ஆக உள்ளார். தற்போதைய சூழலில் திமுக மீது மக்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது.
சொத்து வரி, மின் கட்டணம் ஆகியவை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில், ஒவ்வொருவரும் வேட்பாளராக இருந்தால் எவ்வாறு செயல்படுவீர்களோ, அதே உற்சாகத்துடன் பணி செய்ய வேண்டும். ஒவ்வொரு பூத்திலும் உறுப்பினர்கள் தங்கள் பொறுப்பைச் சரியாக நிறைவேற்றுகிறார்களா என்பதை மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
‘எஸ்ஐஆர்’ திட்டத்தை திறம்பட செயல்படுத்த வேண்டும். கொளத்தூர் தொகுதியில் மட்டும் 4,379 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பல்வேறு தேசிய பிரச்சினைகள் இருந்தபோதும், மத்திய நிதியமைச்சர் தமிழ்நாட்டின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். மக்கள் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நினைக்கின்றனர்; அதை நிஜமாக்க வேண்டும்,” என்றார்.
நிர்மலா சீதாராமன் உரை
அதனைத் தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன் கூறினார்:
“தமிழகம் முழுவதும் பாஜகக்கு 4 லட்சம் பொறுப்பாளர்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசின் மூலம் தமிழகத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை வழங்கியுள்ளார்.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது பிரதமர் கூறியபடி, ‘கியான்’ எனப்படும் (ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள்) நான்கு பிரிவுகளுக்கான திட்டங்களை நன்கு செயல்படுத்தினால், அனைத்து தரப்பினரையும் அணுக முடியும்.
பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சி பாஜக. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கும் சட்டம் இயற்றப்பட்டது. நமது நல்ல திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும்; இதன் மூலம் பொய் பிரச்சாரங்களைத் தடுக்க முடியும்.
பிரதமர் மோடி யாருக்கும் குறையின்றி ஆட்சி நடத்துகிறார். ஆனால் அவருக்குப் புகழ் கிடைக்கக் கூடாது என்பதற்காக சிலர் முயற்சி செய்கிறார்கள்.
ஜல்லிக்கட்டை தடை செய்தது காங்கிரஸ்; அதற்கு ஆதரவு தெரிவித்தது திமுக. ஆனால் அதை மீண்டும் அனுமதித்தவர் பிரதமர் மோடி. அதேபோல், நீட் தேர்வு மூலம் ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இருப்பினும், திமுக அதை எதிர்க்கிறது.
மக்களுக்கான பல நன்மைத் திட்டங்களை தடுக்க திமுக முயற்சிக்கிறது. திமுக-வுடன் கூட்டணி இல்லையெனில், ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெறாது. தேசியத்தையும் ஆன்மீகத்தையும் மதிக்கும் கட்சி பாஜக மட்டுமே.
‘எஸ்ஐஆர்’ திட்டத்தால் மாற்றம் வருவதை கண்டு திமுக அச்சப்படுகிறது. அதற்கேற்ப அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். கூட்டணிக் கட்சிகளின் கொடியையும் உயர்த்தி கொண்டு செல்லுங்கள்; அதுவே ஒற்றுமையை வெளிப்படுத்தும்.
தமிழகத் தேர்தல் பணிகளில் நான் ஒரு தொண்டராகச் செயல்படுவேன்,” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உட்பட 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.