“ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்” – நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று (நவம்பர் 11) கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னிலையில் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
“ஜிஎஸ்டி வரி மாற்றங்களால் பல பொருட்களின் விலை குறைந்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பாராட்டு விழாவில் கலந்துகொள்ள கோவை வந்துள்ளேன்.
தமிழ்நாடு முழுவதும் திமுக, ‘எஸ்ஐஆர்’ பணிகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவது ஆச்சரியம் அளிக்கிறது. இது பாஜக தொடங்கிய நடவடிக்கை அல்ல. 1952 முதல் 13 முறை ‘எஸ்ஐஆர்’ நடைபெற்றுள்ளது. அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக எதுவும் சொல்லவில்லை; ஆனால் இப்போது மட்டும் போராட்டம் நடத்துகிறது.
முதல்வர் ஸ்டாலின் புரியாமலே வீடியோ வெளியிட்டுள்ளார்; துணை முதல்வர் ‘எஸ்ஐஆர்’ என்றால் என்ன என்பதையும் அறியவில்லை. தங்களது ஆட்சித் தோல்விகளை மறைக்க திமுக இத்தகைய பிரச்சாரங்களை நடத்துகிறது.”
அவர் மேலும் கூறினார்:
“தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட கொளத்தூர் தொகுதியில் மட்டும் 4,379 போலி வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரே பெயர், ஒரே சொந்தகாரர் பெயர், ஒரே வயது — ஆனால் வாக்காளர் அட்டை எண்கள் வேறுபட்டுள்ளன. மேலும் 933 வாக்காளர்கள் போலி முகவரியில் உள்ளனர். இதுபோன்ற முறைகேடுகளை நீக்குவது தேர்தல் ஆணையத்தின் கடமை அல்லவா?
இத்தகைய தவறுகள் உள்ள நிலையில் ஸ்டாலின் வெற்றி பெற்றது குறித்து கேள்வி எழுப்ப முடியாதா?”
பிஹார் மாநிலத்தைச் சுட்டிக்காட்டிய அவர்,
“அங்கு 22 லட்சம் இறந்தவர்கள் இன்னும் வாக்காளர் பட்டியலில் உள்ளனர்; 7 லட்சம் பேர் பல இடங்களில் பெயர் பதிவு செய்துள்ளனர்; 35 லட்சம் பேர் பிஹாரை விட்டு வெளியேறிவிட்டதாக தெரிவித்துள்ளனர். மொத்தம் 64 லட்சம் பேர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கக்கூடாது என்பதால், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது,” என தெரிவித்தார்.
மேலும்,
“இரண்டாவது கட்டமாக, 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் ‘எஸ்ஐஆர்’ பணிகள் தொடங்க உள்ளன. அரசியலமைப்பின் கீழ் தேர்தல் ஆணையத்திற்கு இதற்கான அதிகாரம் உள்ளது,” எனவும் கூறினார்.
அதோடு,
“இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி தொடர்பாக தொழில் துறையினருடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. விரைவில் சலுகை திட்ட அறிவிப்பு வெளியாகும்,” என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.