“பாஜகவுக்கு துணைபோகும் அதிமுகவுக்கு இதுதான் கடைசி தேர்தல்” – செந்தில் பாலாஜி
தமிழ்நாட்டில் வாக்குரிமையை பறிக்க முயலும் பாஜக அரசுக்கு துணைபோகும் அதிமுகவுக்கு இது இறுதியான தேர்தல் என முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று (நவ.11) கோவை சிவானந்தா காலனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் தலைமை வகித்து பேசிய செந்தில் பாலாஜி கூறியதாவது:
“வாக்களிப்பது மக்களின் அடிப்படை உரிமை. அந்த உரிமையை மத்திய பாஜக அரசு தேர்தல் ஆணையத்தின் மூலம் பறிக்க முயற்சிக்கிறது. முன்பு வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ மூலம் தமிழ்நாட்டில் அடக்குமுறையை ஏற்படுத்தி ஆட்சியை பிடிக்க முயன்ற பாஜக தோல்வியடைந்தது. இப்போது, அதே முயற்சியை தேர்தல் ஆணையம் வழியாக செய்கிறது.”
அவர் மேலும் கூறினார்:
“பிஹாரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன. அதேபோல் தமிழகத்திலும் வாக்காளர்களை நீக்க பாஜக முயற்சிக்கிறது. 2026 தேர்தலில் திமுக வெற்றி பெறுவதைத் தடுக்க இதை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு முழுமையாக துணையாக அதிமுக செயல்படுகிறது. எஸ்ஐஆர் உள்ளிட்ட பிரச்சினைகளில் கூட பாஜக கூட்டணிக் கட்சிகள் விமர்சிக்கும்போது, அதிமுக தலைமை கண்ணை மூடி பாஜக பக்கம் நின்று வருகின்றது.”
இதை தொடர்ந்து செந்தில் பாலாஜி வலியுறுத்தினார்:
“தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கும் பாஜக அரசுக்கு துணைபோகும் அதிமுகவுக்கு இதுவே இறுதி தேர்தல். கோவையிலும் அதிமுகவின் அரசியல் இதோடு முடிவடையும்.”
இவ்வாறு செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.