பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, நரேந்திர மோடி பிரதமராக தொடர்ந்து இருப்பாரா என்பதே கேள்விக்குறியாகும் என்றும் அவர் கூறினார்.
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆர். எஸ். பாரதி கூறியதாவது:
“வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மிகவும் ஆபத்தானது. இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதற்கே தடையாக இந்த திருத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.”
அவர் மேலும் கூறினார்:
“பிஹார் தேர்தல் முடிவில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும். அதன் பின்னர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பின், மோடி பிரதமராக இருப்பாரா என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி. பிஹார் வெற்றிக்குப் பிறகு, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுடன் நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.”
இவ்வாறு ஆர். எஸ். பாரதி தெரிவித்தார்.