பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாக நுழைவாயிலுக்கு வெளியே இன்று (நவம்பர் 11) ஏற்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் இஸ்லாமாபாத் ஜி-11 பகுதியிலுள்ள நீதிமன்றத்தின் முன்பாக நடந்ததாக அரசு நடத்தும் பாகிஸ்தான் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
தாக்குதலில் உயிரிழந்தோரின் உடல்கள் பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனம் (PIMS) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. காயமடைந்த 20 பேரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகாரிகள் தெரிவித்ததாவது, இது தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் என உறுதியாகியுள்ளது; வெடிபொருள் கையாள்ந்த நபரின் தலை சாலையில் கிடந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் அல்லது நபரும் பொறுப்பேற்கவில்லை. எனினும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு இடையிலான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையில் பயங்கரவாத பிரச்சினையை சமாளிப்பது குறித்து எந்த உடன்பாடும் எட்டப்படாத சில நாட்களுக்குப் பிறகு இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
தாக்குதல் நடந்த இடத்தை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி நேரில் சென்று பார்வையிட்டார். குற்றவாளிகளை விரைவில் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவோம் என்று அவர் உறுதியளித்தார்.