ஹாஸ்டல்கள் வணிக நோக்கத்துக்கான கட்டிடங்களாகாது என்பதால், அவற்றுக்கு வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரி விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மாணவர்கள், மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் தங்கும் ஹாஸ்டல்களுக்கு, வணிகக் கட்டிடங்களுக்கான சொத்து வரி செலுத்த வேண்டும் என சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகள் உத்தரவிட்டிருந்தன. அந்த உத்தரவுகளை ரத்து செய்ய ஹாஸ்டல் உரிமையாளர்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். வழக்கில் மனுதாரர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபர்ணா நந்தகுமார், “ஹாஸ்டல்களுக்கு வணிக வரி விதித்தால், அதன் சுமை மாணவர்கள் மற்றும் தங்கும் நபர்களிடம் போய்ச் சேரும்,” என வாதிட்டார்.
அந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி,
“ஹாஸ்டல்கள் வணிக நோக்கத்திற்காக நடத்தப்படுவதல்ல; தனி வீடு வாடகைக்கு எடுக்க முடியாதவர்கள் தங்கும் குடியிருப்பு வகை கட்டிடங்களே அவை. எனவே, வணிகக் கட்டிடங்களாக கருதி சொத்து வரி விதிக்க இயலாது,”
என்று கூறி, மாநகராட்சிகள் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்தார்.
மேலும், ஹாஸ்டல்களுக்கு குடியிருப்பு கட்டிடங்களுக்கான சொத்து வரி மட்டுமே வசூலிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.