அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசுக்கு 10 நாட்கள் கூடுதல் அவகாசம்

Date:

அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சமர்ப்பிக்க, தமிழக அரசுக்கு மேலும் 10 நாட்கள் கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் 27 அன்று கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, அரசியல் தலைவர்களின் ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு விதிமுறைகள் வகுக்க வேண்டும் என பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களை முன்பு விசாரித்த உயர் நீதிமன்றம், அரசுக்கு 10 நாட்களுக்குள் வரைவு விதிமுறைகளை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அந்த வழக்குகள் இன்று (நவம்பர் 11) தலைமை நீதிபதி எம். எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் மீண்டும் விசாரிக்கப்பட்டன.

அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அரசு பல்வேறு துறைகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

அவர் மேலும், நவம்பர் 6 அன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டதாகவும், அதில் 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கருத்துக்களை பகிர்ந்ததாகவும் கூறினார். தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 40-க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கும் வரைவு வழிகாட்டு விதிமுறைகள் அனுப்பி, அவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த கருத்துக்களை ஒருங்கிணைத்து, துறையினருடன் ஆலோசனை நடத்தி இறுதி வரைவு தயாரிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசு கோரிக்கை வைத்தது.

இதற்கு தலைமை நீதிபதி, “ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி நிபந்தனைகள் விதிக்கப்படுகிறதா?” எனக் கேட்டதுடன், அனுமதி கடைசி நேரத்தில் வழங்கப்படுவதாக வரும் குற்றச்சாட்டுகளையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், பொதுக்கூட்டம் அல்லது ரோடு ஷோக்களுக்கு அனுமதி வழங்கும்போது தேவையில்லாத நிபந்தனைகள் விதிக்கக்கூடாது என்றும், கட்சிகள் 15 நாட்களுக்கு முன் விண்ணப்பித்தால், 5 முதல் 7 நாட்களில் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அனைத்து கட்சிகளின் கருத்துக்களும் அரசிடம் உள்ள நிலையில், பதிவு செய்யப்பட்ட கட்சிகளான தவெக மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி தங்களின் யோசனைகளை உடனடியாக அரசுக்கு அனுப்ப வேண்டும் எனவும், அவற்றை பரிசீலித்து நவம்பர் 20க்குள் வரைவு விதிமுறைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அரசுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது.

வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 21 அன்று நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், வழிகாட்டு விதிமுறைகள் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பாஜக முன்னாள் நிர்வாகி மற்றும் ஒரு வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுக்களை, தலைமை நீதிபதி அமர்வு ஏற்க மறுத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு – ட்ரோன்களுக்குத் தடை!

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு -...

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில் வெடித்தது முழு அளவிலான போர்!

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில்...

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் நாட்டின் ராணுவ பலம் குறித்த விரிவான தகவல்கள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில்,...

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் – மர்ம நபர்களின் அட்டூழியம்!

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் - மர்ம நபர்களின்...