மூத்த தம்பதிகளுக்கான சிறப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
சென்னையின் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 70 வயது கடந்த மூத்த தம்பதிகளுக்காக சிறப்பு செய்யும் புதிய திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டத்தைத் தொடங்கி வைத்து, 200 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்தார்.
தொடர்ந்து, பார்த்தசாரதி சுவாமி கோயில் சார்பில் திருவல்லிக்கேணி நல்லத்தம்பி தெருவில் ரூ.2.06 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை ஆணையர், செயல் அலுவலர் மற்றும் கண்காணிப்பாளர் குடியிருப்புகளையும், பார்த்தசாரதி தெருவில் ரூ.1.35 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பணியாளர் குடியிருப்புகளையும் திறந்து வைத்து, வீடு ஒதுக்கீட்டு ஆணைகளையும் வழங்கினார்.
அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,
“சென்னை மண்டலத்தில் 200 மூத்த தம்பதிகளும், மற்ற மண்டலங்களிலிருந்து 631 தம்பதிகளும் என மொத்தம் 831 மூத்த தம்பதிகளுக்குச் சிறப்பு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு ரூ.2,500 மதிப்பிலான புத்தாடைகள், பழங்கள், மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன,” என்றார்.
மேலும் அவர் உணர்ச்சியுடன் கூறியதாவது:
“ஒரு வீட்டில் மகன் அல்லது பேரனின் திருமணத்தை பெற்றோர்களும் தாத்தா பாட்டியாரும் நடத்தி வைப்பார்கள். ஆனால் இன்று, ஒரு பேரனாகிய எனக்கு, தாத்தா பாட்டியினுடைய திருமணத்தை நடத்தும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது,” என்றார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னை மேயர் ஆர்.பிரியா, குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், பெரும்புதூர் ஜீயர் ராமானுஜ எம்பார் சுவாமிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சுற்றுலாத்துறை செயலர் மணிவாசன், அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதே நாளில் நடைபெற்ற ‘திமுக – 75 அறிவுத் திருவிழா’ மாநாட்டின் நிறைவு விழாவில் உதயநிதி ஸ்டாலின் விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார்.
“இப்போது சிலர் அரசியலில் அடித்தளமோ, கொள்கையோ இல்லாமல் நுழைய முயற்சிக்கிறார்கள். ஆனால் திமுகவுக்கு கொள்கைதான் அடித்தளம்,” என்று குறிப்பிட்டார்.