கல்பாக்கம் அணுமின் நிலையங்கள் நான்கு அடுக்கு பாதுகாப்பில் — தீவிர சோதனைக்கு பின் மட்டுமே அனுமதி
டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், சென்னை அணுமின் நிலையம் உள்ளிட்ட முக்கிய அணு நிலையங்கள் தற்போது நான்கு அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (CISF) மற்றும் மாநில காவல்துறை இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அணுமின் நிலையம் சுற்றுவட்டாரங்களில் வாகனங்களும், நபர்களும் தீவிரமாக சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் சேவை வாகனங்கள் ஆகியவை அனைத்தும் CISF சோதனைக்கு பிறகே நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன. நுழைவாயில்களில் பல்வேறு அடுக்குகளில் கண்காணிப்பு மற்றும் அடையாளச் சரிபார்ப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், கல்பாக்கம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது என காவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.