திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, அமைச்சர் ஐ. பெரியசாமி அதிமுக குறித்து கடும் விமர்சனம் செய்தார்.
முதியோர் பராமரிப்பு மையமான ‘அன்புச் சோலை’ திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் ஐ.பெரியசாமி, எம்.பி. ஆர். சச்சிதானந்தம், ஆட்சியர் செ. சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது:
“திமுக எஸ்ஐஆர் குறித்து பயப்படவில்லை. தேர்தல் அறிவிப்பு இன்னும் இரண்டு மாதங்களில் வெளியாகும். தற்போது பெயர் சேர்த்தல், குறைகள் நீக்கல் உள்ளிட்ட பணிகளுக்கு போதிய நேரம் இல்லை. தேர்தல் முடிந்த பின் ஒரு வருடத்திற்குப் பிறகும் எஸ்ஐஆர் நடத்தலாம்; அதற்கு எங்களுக்குத் தயக்கம் இல்லை. ஆனால் இப்போது நடத்துவது சரியான நேரம் அல்ல.
எஸ்ஐஆர் மூலம் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. பல மாநிலங்களில் மத்திய பாஜக அரசு இதே தந்திரத்தால் வெற்றியை பெற்றது. அதே நிலையை தமிழ்நாட்டிலும் உருவாக்க முயல்கிறது. ஆனால் அது நடக்காது.
அதிமுகவுக்கு தேர்தலில் நம்பிக்கை இல்லை. எந்த நேரத்திலும் தேர்தல் வந்தாலும் திமுக அதனை சந்திக்கத் தயாராக உள்ளது. திமுகவின் அடித்தளம் உறுதியாக உள்ளது; ஆனால் அதிமுகவில் தலைமையில்லை.
முதல்வர் மு.க. ஸ்டாலின் கோடி தொண்டர்களின் நம்பிக்கையையும், 8 கோடி மக்களின் நம்பிக்கையையும் பெற்ற தலைவர். மக்கள் அதிமுகவை நம்பத் தயாராக இல்லை. அதன் வாக்கு சதவீதம் 18 சதவீதத்திற்குக் கீழ் சரிந்தாலும் ஆச்சரியமில்லை. அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பதில்லை; ‘கட்சி இருந்தால் போதும்’ என்ற மனநிலையில் உள்ளது,” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.