பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் முன்பதிவு தொடங்கியது
வரும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரயில்களில் சொந்த ஊர் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி 13 அன்று போகி, 14 அன்று தைப்பொங்கல், 15 அன்று மாட்டுப் பொங்கல் மற்றும் 16 அன்று உழவர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பல லட்சம் பேர் சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், ஜனவரி 9-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) புறப்படுவோருக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று ஆரம்பமானது. ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததாவது:
“மக்கள் தேவைக்கேற்ப கூடுதல் பெட்டிகள் இணைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். காத்திருப்பு பட்டியலைக் கண்காணித்து, டிசம்பர் இறுதியில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும்,” என தெரிவித்தனர்.
பொங்கல் பண்டிகை முடிந்து ஜனவரி 17, 18 தேதிகளில் திரும்புவோர், நவம்பர் 18, 19 தேதிகளில் முன்பதிவு செய்ய முடியும் எனவும் அதிகாரிகள் கூறினர்.