கதாநாயகனாக நடிக்க முதலில் தயங்கிய முனீஷ்காந்த்!
நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களால் ரசிகர்களிடம் பிரபலமான முனீஷ்காந்த், இப்போது கதாநாயகனாக நடித்துள்ளார். அவரது புதிய படம் ‘மிடில் கிளாஸ்’, நவம்பர் 21-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இப்படத்தை கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ளார். முனீஷ்காந்தின் மனைவியாக விஜயலட்சுமி நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, வேல ராமமூர்த்தி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தைப் பற்றி இயக்குநர் கூறியதாவது:
“இது குடும்ப வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதை. வேறு எண்ணங்களுடன் வாழும் கணவன்-மனைவி இடையே உருவாகும் முரண்பாடுகளை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறோம். முனீஷ்காந்தின் கதாபாத்திரம் கிராமத்தில் வீடு கட்டி அமைதியாக வாழ விரும்புபவர்; ஆனால் விஜயலட்சுமி நகர வாழ்க்கையை விரும்புபவர். இந்த எதிர்மறை எண்ணங்கள் இருவரின் வாழ்வையும் மாற்றும் ஒரு சம்பவத்துக்கு வழிவகுக்கிறது.”
“முதலில் படம் ஒரு குடும்பக் கதையாகத் தொடங்கினாலும், பின்னர் வேறு திருப்பத்தை எடுக்கும். முனீஷ்காந்திடம் நாயகனாக நடிக்கச் சொல்லியபோது அவர் ஆரம்பத்தில் தயங்கினார். ஆனால், இந்தக் கதாபாத்திரத்தில் காமெடி, சென்டிமென்ட், குணச்சித்திரம் — அனைத்தும் இருப்பதால், அவரே சரியான தேர்வு என நாங்கள் நம்பினோம். பின்னர் அவர் சம்மதித்தார்,” என இயக்குநர் தெரிவித்தார்.
“பார்வையாளர்கள் ‘மிடில் கிளாஸ்’ கதையில் தங்களையே காண்பார்கள். இது அனைவருக்கும் நெருக்கமான ஒரு அனுபவமாக இருக்கும்,” என்றும் அவர் கூறினார்.