தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, பாஜக அதிமுகவிடம் 50 தொகுதிகள் கேட்டு அழுத்தம் கொடுக்கிறது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக மற்றும் தமாகா மட்டுமே இருந்தாலும், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணையும் வாய்ப்பு உறுதியாகக் காணப்படுகிறது. இதேநேரத்தில், பாஜக கடந்த முறை பெற்ற 20 தொகுதிகளுக்குப் பதிலாக இம்முறை 50 முதல் 60 தொகுதிகள் வரை கோரியுள்ளது.
பாஜக தரப்பில், 2024 மக்களவைத் தேர்தலில் 9 தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்தது மற்றும் வாக்கு வங்கி மூன்றரை மடங்கு உயர்ந்தது எனும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, அதிக தொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. மேலும், தங்களுக்கு சாதகமான ஸ்ரீரங்கம், பழநி, நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற முக்கிய கோயில் தொகுதிகளும் பாஜக கோரிக்கையில் இடம்பெற்றுள்ளன.
இதனால் அதிமுக வட்டாரங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன. பாமக, தேமுதிக, தமாகா போன்ற கூட்டணி கட்சிகளுக்கும் இடம் ஒதுக்க வேண்டியிருப்பதால், அதிமுக பாஜகக்கு அதிகபட்சம் 25 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பாஜகவினர் “50 தொகுதிகள் லட்சியம்… 40 தொகுதிகள் நிச்சயம்” என தங்கள் உள்கட்டமைப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். 60 தொகுதிகளுக்கான ஆய்வும், வேட்பாளர் மதிப்பீடும், நிலைமைக் கணக்குகளும் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளன.
பாஜகவின் உறுதியான நிலைப்பாட்டால், எதிர்வரும் மாதங்களில் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை முக்கிய அரசியல் விவாதமாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.