நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பகல்–இரவு என இடைவிடாத மழை பெய்து வருகிறது.
தொடர்ச்சியான மழையின் தாக்கத்தில், பல இடங்களில் மண் சரிவும் பாறை சரிவும் ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக, குன்னூர்–கட்டப்பெட்டு சாலை மற்றும் சோலூர்மட்டம் சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டதால் வாகனப் போக்குவரத்து தடைபட்டது.
நெடுஞ்சாலைத்துறையினர் ஜே.சி.பி. வாகனங்கள் மூலம் மண் மற்றும் பாறைகளை அகற்றி போக்குவரத்தை மீண்டும் சீரமைத்தனர். அதே நேரத்தில், குன்னூர் அம்பிகாபுரம் பகுதியில் மரம் ஒன்று காரின் மீது விழுந்து, கார் சேதமடைந்தது.
மலை ரயில்பாதையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம்–குன்னூர் பாதையில் பல இடங்களில் மண் சரிவும் பாறைகள் விழுவதும் ஏற்பட்டதால், இன்று (திங்கட்கிழமை) மலை ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் மேட்டுப்பாளையம்–குன்னூர் மற்றும் குன்னூர்–ஊட்டி இடையேயான ரயில்கள் இயங்கவில்லை.
ரயில்வே துறை ஊழியர்கள் தற்போது பாதையில் ஏற்பட்ட சேதங்களை அகற்றி, தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பல இடங்களில் அதிக மழை பதிவாகியுள்ளது. கோத்தகிரி பகுதியில் 137 மில்லிமீட்டர், கீழ் கோத்தகிரி 102 மி.மீ., பர்லியார் மற்றும் பந்தலூர் தலா 92 மி.மீ., கோடநாடு 88 மி.மீ., கெத்தை 76 மி.மீ., எடப்பள்ளி 72 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.