வரி வருவாயிலிருந்து அமெரிக்கர்களுக்கு தலா 2,000 டாலர் டிவிடெண்ட்: ட்ரம்ப் உறுதி
அமெரிக்கா கூடுதல் வரிவிதிப்பின் மூலம் டிரில்லியன் கணக்கான டாலர் வருவாயை ஈட்டும் என்றும், அந்த வருவாயிலிருந்து ஒவ்வொரு அமெரிக்கருக்கும் விரைவில் 2,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.77 லட்சம்) டிவிடெண்ட் (விநியோகத் தொகை) வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதியளித்தார்.
ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் கூறியதாவது:
“கூடுதல் வரியை எதிர்ப்பவர்கள் தவறாக இருக்கிறார்கள். என் தலைமையில், அமெரிக்கா உலகில் மிகவும் பணக்கார, மதிப்புக்குரிய, பணவீக்கம் இல்லாத நாடாக மாறியுள்ளது. பங்குச் சந்தை வரலாற்றில் இல்லாத உச்சத்தை தொட்ந்துள்ளது.
கூடுதல் வரிகளின் மூலம் அமெரிக்கா டிரில்லியன் கணக்கான வருவாயை பெறுகிறது. இதன் ஒரு பகுதியை எங்கள் மிகப்பெரிய, 37 டிரில்லியன் டாலர் கடனை செலுத்துவதற்கு பயன்படுத்துவோம். நாட்டில் முதலீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் பல இடங்களில் விரைவாக வளர்கின்றன.
மேலும், அதிக வருமானம் ஈட்டுபவர்களை தவிர்ந்தால், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் விரைவில் தலா 2,000 டாலர் (டிவிடெண்ட்) வழங்கப்படும்” என அவர் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த தொகை எப்போது மற்றும் எவ்வாறு வழங்கப்படும் என்பதில் அவர் எந்தவொரு விபரத்தையும் கூறவில்லை. ஆனால் வரிகளிலிருந்து கிடைக்கும் வருவாய் மக்கள் நன்கு பயன்பெறும், அதே சமயம் தேசிய கடனை குறைக்கும் வகையிலும் பயன்படுத்தப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.