ஆன்லைனில் எஸ்ஐஆர் படிவங்களை நிரப்பும் புதிய வசதி: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு
வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான எஸ்ஐஆர் படிவங்களை இப்போது ஆன்லைனில் நிரப்பக்கூடிய வசதி தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:
வாக்காளர்களின் சுலபத்திற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in-ல் எஸ்ஐஆர் (SIR) படிவத்தை ஆன்லைனில் நிரப்பும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி இணையதளத்தில் உள்நுழையலாம். உள்நுழைவதற்காக பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒரு முறை கடவுச்சொல் (OTP) பயன்படுத்த வேண்டும். அதன் பின் இணையதளத்தில் காட்டப்படும் “Fill Enumeration Form” என்ற இணைப்பை தேர்ந்தெடுத்து படிவத்தை நிரப்பலாம்.
இ-சைன் முறை:
இந்த வசதி, வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரும் ஆதார் அட்டையில் உள்ள பெயரும் ஒரேபோல பொருந்தும் வாக்காளர்களுக்கே கிடைக்கும். உள்நுழைந்த பிறகு தேவையான விவரங்களைச் சரியாக உள்ளீடு செய்ய வேண்டும். பின்னர், இணையம் இ-சைன் (e-sign) பக்கத்துக்கு மாற்றப்படும். அப்போது மீண்டும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அந்த OTP-ஐ உள்ளிட்டவுடன், படிவம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்படும்.
தங்களது மொபைல் எண்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும், மேலும் வாக்காளர் பட்டியல் மற்றும் ஆதார் பதிவுகளில் பெயர் ஒரேபோல இருக்கும் வாக்காளர்கள் இந்த ஆன்லைன் வசதியைப் பயன்படுத்துமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.