நவம்பர் 15 வரை இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது:
வட தமிழகத்தையும் அதனை ஒட்டிய பகுதிகளையும் சூழ ஒரு வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை மாநிலத்தின் பல இடங்களில், மேலும் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான அளவிலான இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதேபோல் வரும் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.