“முகம் சுளிக்க வைக்கும் பிக் பாஸ்” — தடை செய்யக் கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தமிழர் பண்பாடு மற்றும் குடும்ப மதிப்புகளை சீர்குலைக்கும் வகையில் “பிக் பாஸ்” நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது எனக் குற்றம் சாட்டி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மகளிர் அணியினர் பூந்தமல்லியில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பூந்தமல்லி குந்தம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள பிக் பாஸ் படப்பிடிப்பு தளம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில மகளிர் அணி தலைவி முத்துலட்சுமி வீரப்பன், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் இலக்கியா, மகளிர் அணி செயலாளர்கள் அமராவதி, மதுபாலா, துணைச் செயலாளர்கள் கார்குழலி, சந்திரா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய முத்துலட்சுமி வீரப்பன்,
“தமிழ் கலாசாரம், குடும்ப ஒழுக்கம் ஆகியவற்றை அழிக்கும் வகையில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இத்தகைய அநாகரீகமான நிகழ்ச்சிகளை எதிர்த்து பொதுமக்களும் குரல் கொடுக்க வேண்டும். தமிழக முதல்வர் இதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,”
என்றார்.
அதனைத் தொடர்ந்து, “ஆபாச நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்” எனக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியதாவது:
“தமிழ் சமூகம் தலைகுனியும்விதமாகவும், முகம் சுளிக்கும்விதமாகவும் விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதை நிறுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளேன், ஆனால் விஜய் டிவி இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
இப்போது மகளிர் அணி ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதற்கான அனுமதி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி.
இங்கு காவலர்கள் இல்லாமல் இருக்க, பிக் பாஸ் அரங்கிற்கு 500 காவலர்கள் பாதுகாப்பு வழங்கப்படுவது வேதனையாக உள்ளது. அங்கு நடப்பதெல்லாம் ஆபாசம்! விரைவில் இதற்கு உரிய பதில் நாங்கள் அளிப்போம்.
மேலும், நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து விலக வேண்டும்,”
என வேல்முருகன் தெரிவித்தார்.