குன்னூரில் கனமழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குன்னூரில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குன்னூர் எடப்பள்ளி பகுதியில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் உழவர் சந்தை அருகே உள்ள மாடல் ஹவுஸ் பகுதியில் மூன்றாவது முறையாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மக்கள் புகாரின்படி, நகராட்சி அதிகாரிகள் இடைக்கால நடவடிக்கையாக மட்டுமே அடைப்புகளை அகற்றி வருவதால் நிரந்தர தீர்வு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மறைக்கப்பட்ட கால்வாய்கள், பாதாள சாக்கடைகள் மீது கட்டிடங்கள் எழுப்பப்பட்டிருப்பதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
உழவர் சந்தை செல்லும் சாலையின் சிறு பாலத்தில் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இதனால் சாலை உடைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் போக்குவரத்து முடங்கியது.
மேலும் குன்னூரின் அட்டடி, டால்பின் நோஸ், கரும்பாலம், கிளண்டேல் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இணைந்து மரங்களையும் பாறைகளையும் அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீ.): ஊட்டி – 123, எடப்பள்ளி – 113, பந்தலூர் – 74, கெத்தை – 56, கோடநாடு – 56, கோத்தகிரி – 52, குந்தா – 49, கிண்ணக்கொரை – 41, பாலகொலா – 39, கூடலூர் – 6.