நவம்பர் 15-க்குள் கோதுமை 100% அனுப்பப்படும்: தமிழக அரசு விளக்கம்
தமிழகத்தின் 12,573 நியாய விலை கடைகளில் கோதுமை இல்லை என்ற எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர். சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நவம்பர் 15-க்குள் அனைத்து நியாய விலை கடைகளுக்கும் 100% கோதுமை அனுப்பி முடிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
“ஜனவரி 2024 முதல் செப்டம்பர் 2024 வரை ஒன்றிய அரசு மாதம் 8,576 மெட்ரிக் டன் கோதுமை மட்டுமே வழங்கியது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து முயற்சி செய்ததன் விளைவாக, அக்டோபர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை ஒதுக்கீடு 17,100 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டது.
தற்போது மார்ச் 2025 முதல் மீண்டும் 8,576 மெட்ரிக் டன் என குறைக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்திற்காக 8,722 மெட்ரிக் டன் கோதுமை ஒதுக்கீடு செய்யப்பட்டு, 8 நவம்பர் வரை 63% (5,386 மெட்ரிக் டன்) கோதுமை நகர்த்தப்பட்டுள்ளது. 15 நவம்பர் வரை அனைத்து கடைகளுக்கும் முழுமையாக அனுப்பப்படும்.”
மேலும், தற்போதைய குறுவை பருவத்தில் 1.75 இலட்சம் விவசாயிகளிடமிருந்து 13.48 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, ₹3,249.38 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அவர் முடிவில்,
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இதே காலகட்டத்தில் 4.41 இலட்சம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. அவர் அரசில் வழங்கப்பட்ட விலை தற்போது திராவிட மாடல் ஆட்சியில் அதிகரிக்கப்பட்டுள்ளது. உண்மை நிலையைப் புரிந்துகொள்ளாமல் அரசியல் குற்றச்சாட்டுகள் செய்ய வேண்டாம்,”
என வலியுறுத்தினார்.