தமிழ்நாட்டில் 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு – எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை விநியோகம் இல்லை என செய்திகள் வெளியாகி வருவதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில் கூறியதாவது:
“தமிழ்நாட்டில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லையென செய்திகள் வெளியாகின்றன.
இம்மாதத்திற்கு மத்திய அரசு 8,722 டன் கோதுமையை ஒதுக்கியிருந்தும், ஸ்டாலின் மாடல் திமுக அரசு அதனை முறையாக மக்களுக்கு வழங்கவில்லை என கூறப்படுகிறது.
ஏற்கனவே துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டபோதும், இந்த அரசு அதனை சரிசெய்ய தாமதமாகவே செயல்பட்டது.
திமுக ஆட்சியில் நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல் தெரிகிறது.
நெல் கொள்முதல் முதல் கோதுமை விநியோகம் வரை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் முழுமையான தோல்வி அடைந்துள்ளது இந்த திமுக அரசு.
உடனடியாக கோதுமை விநியோகத்தை ரேஷன் கடைகளில் உறுதி செய்யுமாறு, ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்,”
என்று எடப்பாடி பழனிசாமி தனது பதிவில் கூறியுள்ளார்.