வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு முழுமையாகத் தயாராக உள்ளது: முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாநில அரசு அனைத்துத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையின் எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இன்று (அக்.19) நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், தேனி, கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சராசரியாக 12 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதாகவும், பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடங்கள், உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் முகாம்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு முழுமையாகத் தயார். சென்னையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இரு மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டுள்ளன,” என்றார்.
அதேபோல், “டெல்டா பகுதிகளில் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நெல் கொள்முதல் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மழையால் இதுவரை எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை,” என்றும் கூறினார்.