தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் விதிமீறல்? — துணைவேந்தர் மீது குற்றச்சாட்டு
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் விதிமுறைகளை மீறி சிண்டிகேட் உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, துணைவேந்தர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் கல்வி, நிர்வாகம், செலவினங்கள் மற்றும் புதிய திட்டங்கள் போன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும் முக்கிய நிர்வாக அமைப்பாக சிண்டிகேட் குழு (Governing Syndicate) விளங்குகிறது.
இந்த குழுவில் உறுப்பினர்கள், ஆளுநர் (வேந்தர்) தரப்பிலும், அரசு சார்பிலும், மேலும் சிண்டிகேட் குழுவின் பரிந்துரையின்படியும் நியமிக்கப்படுவர். குறிப்பாக, குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு உறுப்பினர்களில் ஒருவர் தொலைதூரக் கல்வி அனுபவமிக்கவராகவும், மற்றொருவர் ஊடகத் துறையைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும் என்பது பல்கலைக்கழக விதிமுறை.
இந்நிலையில், சிண்டிகேட் குழுவின் உறுப்பினரான ஜி. அர்ஜுனன், கடந்த அக்டோபர் 8ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் அனுப்பிய ராஜினாமா கடிதம், துணைவேந்தர் எஸ். ஆறுமுகத்தால் அக்டோபர் 13ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அதே தினமே எம். மதிவாணன் என்ற முன்னாள் சென்னைப் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர், புதிய சிண்டிகேட் உறுப்பினராக மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார்.
ஆனால், பல்கலைக்கழக விதிமுறைகளின்படி, சிண்டிகேட் உறுப்பினரின் ராஜினாமா கடிதம் ஆளுநர் (வேந்தர்) அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே அந்தப் பதவி காலியாகும். மேலும், ராஜினாமா செய்த உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு மாதங்களுக்கு மேல் மீதமிருந்தால் மட்டுமே புதிய நியமனம் செய்ய முடியும் என விதி கூறுகிறது.
இந்த இரண்டு முக்கிய விதிகளும் பின்பற்றப்படாமல் நியமனம் செய்யப்பட்டதாக பல்கலைக்கழக வட்டாரங்களில் சர்ச்சை எழுந்துள்ளது. ராஜினாமா செய்த அர்ஜுனனின் பதவிக்காலம் நான்கு மாதங்களுக்கும் குறைவாக இருந்த நிலையில், புதிய உறுப்பினரை மூன்று ஆண்டு காலத்திற்கு நியமித்திருப்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில், சிண்டிகேட் கூட்டம் வரும் நவம்பர் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, விதிமீறல் குறித்த விவகாரம் அக்கூட்டத்தில் விவாதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பல்கலைக்கழக விதிகளை மீறி நியமனம் செய்ததாக கூறப்படும் துணைவேந்தர் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பிடத்தக்கது என்னவென்றால், துணைவேந்தர் ஆறுமுகத்தின் மூன்று ஆண்டு பதவிக்காலம் 2026 ஜனவரி 8ஆம் தேதி நிறைவடைகிறது.