கரூர் ஜவஹர் பஜாரில் தரைக்கடைகள் அகற்றப்பட்டு, மாற்று இடத்தில் அனுமதி – போலீஸாரின் நடவடிக்கை
கரூர் மாவட்டம் ஜவஹர் பஜாரில் தரைக்கடைகள் அமைத்திருந்த வியாபாரிகளை போலீஸார் அகற்றினர். விதிமுறைகளை மீறியதாக 30 வியாபாரிகள் காவல்துறை வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, திருவள்ளுவர் மைதானத்தில் தரைக்கடை அமைக்க போலீஸார் அனுமதி வழங்கினர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூர் மாநகராட்சி கூட்டத்தில், ஜவஹர் பஜார் தவிர பிற பகுதிகளில் தரைக்கடைகள் அமைக்க அனுமதி வழங்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதையடுத்து காவல் துறை, ஜவஹர் பஜாரில் கடைகள் அமைக்க வேண்டாம் என முன்பே அறிவிப்புகள் வெளியிட்டு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 19) ஜவஹர் பஜாரில் சில வியாபாரிகள் தரைக்கடைகள் அமைத்ததால், கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலீஸார் அங்கு சென்று கடைகளை அகற்ற முயன்றனர். இதையடுத்து வியாபாரிகள் மற்றும் போலீஸாருக்கிடையே தற்காலிக வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் 10-க்கும் மேற்பட்ட பெண் வியாபாரிகள் உட்பட 30 பேர் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த தகவலை அறிந்த சாலையோர தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் மற்றும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தண்டபாணி, இன்ஸ்பெக்டருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும், ஜவஹர் பஜார் பகுதியில் வியாபாரிகளுக்கு மாற்று இடமாக திருவள்ளுவர் மைதானத்தை ஒதுக்கி தரவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை போலீஸார் ஏற்று, கைது செய்யப்பட்டவர்களை விடுவித்து, திருவள்ளுவர் மைதானத்தில் கடைகள் அமைக்க அனுமதி வழங்கினர்.
தற்போது வியாபாரிகள் அங்கு தரைக்கடைகள் அமைத்து தீபாவளி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.