கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கம் நிறுத்தம் – ரூ.70 லட்சம் அபராதம் காரணம்
சென்னை: கேரளா போக்குவரத்து துறை ரூ.70 லட்சம் அபராதம் விதித்ததையடுத்து, கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இனி இயக்கப்படாது என்று தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
சமீபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த ஆம்னி பேருந்துகள் முறையாக வரி செலுத்தவில்லை என்றும், ஒருமுறை அனுமதியுடன் தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்பட்டதாகக் கூறி, கொச்சியில் 30 பேருந்துகளுக்கு தலா ரூ.2 முதல் 2.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மொத்தம் ரூ.70 லட்சம் ஆகும்.
இதையடுத்து, சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“கேரள போக்குவரத்து துறை திடீரென 30-க்கும் மேற்பட்ட பேருந்துகளை பிடித்து, பயணிகளை நடுவழியிலேயே இறக்கி கடுமையான சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற நடவடிக்கை இரு மாநிலங்களுக்கும் இடையேயான நல்லுறவையும் போக்குவரத்து ஒத்துழைப்பையும் பாதிக்கும்.”
அதனால், நவம்பர் 7 முதல் கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்றும்,
இரு மாநில அரசுகளும் உடனடியாக தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த முடிவு, ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் தமிழக யாத்திரிகர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.