டிஎன்பிஎஸ்சி குரூப்–4: விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கடைசி வாய்ப்பு – நவம்பர் 14 வரை அவகாசம்
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்–4 தேர்வில் தேர்ச்சி பெற்ற விளையாட்டு வீரர்கள் இன்னும் சான்றிதழ்களை பதிவேற்றாத நிலையில், அவர்களுக்கு நவம்பர் 14 வரை கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ. சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
அக்டோபர் 22ஆம் தேதி வெளியிடப்பட்ட குரூப்–4 தேர்வு முடிவில், விளையாட்டு வீரர்கள் பிரிவில் 1,280 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 590 பேர் மட்டுமே விளையாட்டு சாதனைச் சான்றிதழ்களை பதிவேற்றியுள்ளனர்; மீதமுள்ள 690 பேர் எந்த ஆவணங்களையும் பதிவேற்றம் செய்யவில்லை எனத் தெரியவந்துள்ளது.
சான்றிதழ்களை பதிவேற்றியவர்களும் உரிய படிவங்களுடன் இணைக்காமல் ஆவணங்களை பதிவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தவறான முறையில் பதிவேற்றப்பட்ட ஆவணங்கள் மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்கள், அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்கள் அல்லது கூட்டமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ்களையும், அவற்றுக்கான படிவங்களையும் தேவையான அதிகாரிகளின் கையொப்பத்துடன் பதிவேற்ற வேண்டும்.
இதற்கான கடைசி தேதி நவம்பர் 14 ஆகும். அந்த தேதிக்குள் ஆவணங்கள் பதிவேற்றப்படாவிட்டால், அவர்களின் விண்ணப்பம் விளையாட்டு வீரர்கள் இடஒதுக்கீடு பிரிவில் கருதப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.