“நாட்டில் சைபர் மோசடி தடுப்பு பிரிவு இல்லாதது ஏன்?” – பணத்தை இழந்த திரிணமூல் எம்.பி கேள்வி
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.57 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர், அந்தத் தொகை அவரது வங்கிக் கணக்கில் மீண்டும் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தையடுத்து, கல்யாண் பானர்ஜி நிதி அமைச்சகத்தைக் குறிவைத்து,
“நாட்டில் ஏன் தனி சைபர் மோசடி தடுப்பு பிரிவு இல்லை?”
என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
ஆங்கில ஊடகத்துக்கு அவர் கூறியதாவது:
“ஒரு மக்கள் பிரதிநிதியான நானே சைபர் மோசடியில் சிக்கியிருக்கிறேன் என்றால், சாதாரண மக்கள் எந்த நிலையில் இருப்பார்கள்? நிதி அமைச்சகம் இதற்கென ஏன் தனி பிரிவை உருவாக்கவில்லை?
என் கணக்கில் ரூ.57 லட்சம் இருப்பதை மோசடிக்காரர்கள் எவ்வாறு அறிந்தார்கள்? கே.ஒய்.சி. சரிபார்ப்பை தவறாக பயன்படுத்தி மோசடி நடந்திருக்கிறது. விசாரணை நடைபெற்று வருகிறது. எஸ்பிஐ வங்கியும் புகார் அளித்துள்ளது. தற்போது என் கணக்கில் பணம் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது,” என அவர் கூறினார்.
மோசடி எப்படி நடந்தது?
கல்யாண் பானர்ஜி 2001–2006 காலகட்டத்தில் மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்கியிருந்தார். பின்னர், ஸ்ரீராம்பூர் தொகுதி எம்.பியாகப் பொறுப்பேற்ற பின் அவர் முக்கியமாக தெற்கு கொல்கத்தா வங்கிக் கணக்கை பயன்படுத்தி வந்தார்.
இந்நிலையில், ஒரு மோசடி கும்பல் அவரது பெயரில் போலி பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு தயாரித்து, அந்த வங்கிக் கணக்கின் மொபைல் எண் மாற்றியது. இதன் மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மீது கட்டுப்பாடு பெற்று, ரூ.56 லட்சத்தை பழைய கணக்கிற்கு மாற்றி, அங்கிருந்து பல வங்கிக் கணக்குகளுக்கும், நகைக்கடைகளுக்கும் பணம் பரிமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் மொத்தம் ரூ.57 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.