தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 6,453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் – அமைச்சர் சக்கரபாணி
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 6,453 மெட்ரிக் டன் கேழ்வரகு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, 3,578 விவசாயிகளுக்கு ரூ.26.48 கோடி வழங்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ், கேழ்வரகு கொள்முதல் திட்டம் 2022–2023 ஆம் ஆண்டில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முதன்முறையாக தொடங்கப்பட்டது. அப்போது 514 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2023–2024 ஆம் ஆண்டில் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களும் இணைக்கப்பட்டு, மொத்தம் 1,889 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது.
2024–2025 பருவத்தில் அதே நான்கு மாவட்டங்களிலிருந்து 4,050 மெட்ரிக் டன் கேழ்வரகு வாங்கப்பட்டது.
இதுவரை மூன்று ஆண்டுகளில் மொத்தம் 6,453 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு ரூ.26.48 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், நடப்பு 2025–2026 கொள்முதல் பருவம் நவம்பர் 1 முதல் ஜனவரி 31 வரை நடைபெறும். இக்காலத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் 6000 மெட்ரிக் டன் கேழ்வரகு நேரடியாக கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த ஆண்டு கேழ்வரகின் ஆதார விலை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.48,860 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் ரூ.42,900 ஐ விட ரூ.5,960 அதிகம்.
அமைச்சர் சக்கரபாணி இறுதியாக கூறியதாவது:
“இந்த நன்மை வாய்ப்பினைப் பயன்படுத்தி, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த கேழ்வரகை நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெற வேண்டும்.”