வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி வழக்கு: செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி நேற்று (நவம்பர் 7) சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடமிருந்து பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீஸார் மொத்தம் 3 வழக்குகளைப் பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளில் செந்தில் பாலாஜியுடன் சேர்த்து 2,222 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்குகள் தற்போது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.
நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையில், செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார். இதனை பதிவுசெய்த நீதிபதி, மேலும் 50 பேருக்கு புதிதாக சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 12-க்கு தள்ளிவைத்தார்.