பிஹார் முதல்கட்டத் தேர்தலில் 65.08% வாக்குப்பதிவு – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
பிஹார் சட்டப்பேரவைக்கான முதல்கட்டத் தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
பிஹார் மாநிலத்தில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் முதல்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 121 தொகுதிகளில் நவம்பர் 6 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த கட்டத்தில் 122 பெண்கள் உட்பட மொத்தம் 1,314 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 48, ஜேடிஇயூ (JDU) 57, எல்ஜேபி (ஆர்) 13, ஆர்எல்எம் 2, எச்ஏஎம் 1 வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. மறுபுறம் மெகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) 72, காங்கிரஸ் 24, விஐபி 6, கம்யூனிஸ்ட் கட்சிகள் 22 இடங்களில் போட்டியிட்டன.
முன்னதாக 64.46 சதவீதம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாரபூர்வ தகவலின் படி வாக்குப்பதிவு விகிதம் 65.08 சதவீதமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
2020 பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் சராசரி வாக்குப்பதிவு 57.29% ஆகவும், 2024 மக்களவைத் தேர்தலில் 56.28% ஆகவும் இருந்தது. இதனை ஒப்பிடும்போது, தற்போதைய வாக்குப்பதிவு முறையே 7.79% மற்றும் 8.8% அதிகரித்திருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி குறிப்பிட்டார்.
அவர் மேலும், “இந்த உயர்ந்த வாக்குப்பதிவு பிஹார் மாநில மக்களிடையே அரசியல் ஈடுபாடு அதிகரித்திருப்பதற்கான அறிகுறியாகும்” என தெரிவித்தார்.