ரஷ்யாவில் மருத்துவம் படித்த இந்திய மாணவர் மர்மமாக உயிரிழப்பு – சடலம் அணையில் மீட்பு
ரஷ்யாவில் மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர் ஒருவர் மர்மமாக உயிரிழந்த நிலையில், அவரது சடலம் அணையில் இருந்து மீட்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் லக்ஷ்மன்கர்கை சேர்ந்த 22 வயது அஜித் சிங் சவுத்ரி, ரஷ்யாவின் உபா நகரில் உள்ள பாஷ்கிர் ஸ்டேட் மெடிக்கல் யூனிவர்சிட்டியில் 2023-ம் ஆண்டிலிருந்து எம்பிபிஎஸ் படித்து வந்தார்.
பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த அவர், கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி காலை பால் வாங்கச் சென்று திரும்பவில்லை. பல நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில், அஜித் சிங்கின் சடலம் வெள்ளை நதிக்கு அருகிலுள்ள அணையில் இருந்து மீட்கப்பட்டது.
அவரது மரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை இந்திய தூதரகம் குடும்பத்தாருக்கு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இறந்த மாணவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய வெளியுறவு அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.