பெட்டிக் கடைகள் மூலம் எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம் – தடுக்க வேண்டும் என அதிமுக எம்.பி. இன்பதுரை புகார்
எஸ்ஐஆர் (சிறப்பு தீவிர திருத்தம்) படிவங்களை வாக்குச் சாவடி அலுவலர்கள் வீடு வீடாக வழங்காமல், பெட்டிக் கடைகள் மூலம் மொத்தமாக விநியோகிக்கப்படுவதாக குற்றம் சாட்டி, அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளார்.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று அவர் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் மனுவை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டுமெனில், வாக்காளர் பட்டியலும் துல்லியமாக இருக்க வேண்டும். இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், போலி பெயர்கள் ஆகியோர் பட்டியலில் சேராமல் இருக்கத்தான் எஸ்ஐஆர் திட்டம் கொண்டு வரப்பட்டது,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
“எஸ்ஐஆர் ஒரு நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்டாலும், திமுக இரு முகநோக்குடன் செயல்படுகிறது — ஒரு பக்கம் அதை எதிர்த்து பேச, மறுபக்கம் அதிலேயே குளறுபடிகளை ஏற்படுத்துகிறது. எஸ்ஐஆர் படிவங்கள் வாக்காளர்களுக்கு பிஎல்ஓ (Polling Level Officer) மூலம் வழங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் பலமுறை கோரியிருந்தோம். ஆனால் திமுக வட்டச் செயலாளர்கள், கவுன்சிலர்களிடம் மொத்தமாக கொடுத்து, அவர்கள் வழியாக பெட்டிக் கடைகள் மூலமாக விநியோகம் செய்து வருகின்றனர்.
மதுரை வடக்கு தொகுதியில் இதேபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு பிஎல்ஓ ஒருவர் மொத்தமாக படிவங்களை வழங்கி, பெட்டிக் கடைகளில் பகிர்ந்துள்ளார். அவர்களை கையும் களவுமாக பிடித்து தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்துள்ளோம். இதற்குப் பின்னால் திமுகவின் கையாளுதலே உள்ளது.”
மேலும், “படிவங்கள் வழங்கும் போது, அந்த வீட்டில் வாக்காளர் நேரில் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் திமுகவினர் இடம்பெயர்ந்தவர்களை தொடர்பு கொண்டு, அவர்களின் பெயர்களை பழைய முகவரியிலேயே பதிவு செய்கின்றனர். இது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரானது,” என்றார்.
இன்பதுரை மேலும் கூறினார்:
“சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளர்களை பிஎல்ஓக்களாக நியமித்துள்ளனர். அதில் திமுக சார்ந்தவர்கள் உள்ளனர். இதனால் எவ்வாறு நேர்மையான பணிகள் நடைபெறும்? பிஎல்ஓ பணியில் ஆசிரியர்கள் அல்லது வருவாய்த் துறை ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும்; இவர்கள் தவறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு எதிராக சட்டரீதியாக எதையும் செய்ய முடியாது. இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்தில் நான் அளித்துள்ளேன்,” எனக் கூறினார்.