புதிய டிஜிபி நியமன விவகாரத்தில் 3 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு
தமிழகத்தில் டிஜிபி நியமனத்தைச் சுற்றியுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மாநில அரசு மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை நகரைச் சேர்ந்த கிஷோர் கிருஷ்ணசாமி சார்பில் வழக்கறிஞர் எம். வீரராகவன் தாக்கல் செய்த மனுவில், தற்போதைய டிஜிபியின் பதவிக்காலம் முடியும் முன்பாக, புதிய டிஜிபி நியமனத்திற்கான பெயர் பட்டியலை யுபிஎஸ்சிக்கு குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்னதாக அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இடைக்கால டிஜிபி நியமனங்களை எந்த மாநிலமும் செய்யக்கூடாது என பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது.
ஆனால், அந்த தீர்ப்பை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை என குற்றஞ்சாட்டி, மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஹென்றி திபேன், தமிழக தலைமைச் செயலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசு அனுப்பிய பெயர் பட்டியலை யுபிஎஸ்சி விரைவாக பரிசீலிக்க வேண்டும் என்றும், அதன் பரிந்துரையின் அடிப்படையில் நிரந்தர டிஜிபியை மாநில அரசு உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனையடுத்து, நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி அவமதிப்பு வழக்கை முடித்தது.
இந்நிலையில், யுபிஎஸ்சி பரிந்துரை வந்த பின்னரும், தமிழக அரசு நிரந்தர டிஜிபி நியமனத்தை ஒத்திவைத்து வருகிறது. தற்போது ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டப்படும் தற்காலிக டிஜிபி பணியில் தொடர்கிறார். இதனால், உச்ச நீதிமன்ற உத்தரவை மாநில அரசு பின்பற்றாமல் இருப்பதாக மனுதாரர் மீண்டும் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பிரகாஷ் சிங் வழக்கின் தீர்ப்பை மீறிய தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், விரைவாக நிரந்தர டிஜிபியை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும் என கிஷோர் கிருஷ்ணசாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, நீதிமன்றம் மூன்று வாரங்களுக்குள் பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.