“ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சி இது” – கனிமொழி எம்.பி கண்டனம்
தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி எம்.பி, எஸ்ஐஆர் (SIR) நடவடிக்கை குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“எஸ்ஐஆர் நடவடிக்கை ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சிதான். தேர்தலுக்கு முன்பே இதை அவசரமாக கொண்டு வந்து அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. உண்மையான நோக்கில் செயல்பட விரும்பியிருந்தால் போதிய நேரம் வழங்கி திட்டமிட்டு செயல்படுத்தியிருப்பார்கள்,” என்று கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தது:
“பிஹார், மகாராஷ்டிரா, ஹரியானா போன்ற மாநிலங்களில் பலரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது. தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி வாக்காளர்களின் உரிமைகளை பறிக்கும் சூழல் உருவாகிறது. இதற்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து போராட்டம் நடத்துகின்றன.”
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பேசும் போது,
“ஆண், பெண் என யாரிடமும் குற்றங்கள் நிகழ்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. கோவை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்,” என அவர் தெரிவித்தார்.
கட்சித் தலைவரின் தேர்தல் அறிவுறுத்தல் குறித்த கேள்விக்கு அவர்,
“வெற்றி பெறவில்லை என்றால் பதவி பறிக்கப்படும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார்,” என்று விளக்கம் அளித்தார்.
புதிய மறுவாழ்வு மையம் திறப்பு
இதற்கிடையில், கனிமொழி எம்.பி தூத்துக்குடியில் ரூ.2.38 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட மது மற்றும் போதைப் பொருள் மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்தார்.
மேலும்,
- ரூ.55 லட்சத்தில் கட்டப்பட்ட ஜே.எஸ்.நகர் தொடக்கப் பள்ளி கூடுதல் வகுப்பறைகள்,
- ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளி புதிய கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில், அமைச்சர் பி.கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ எம்.சி.சண்முகையா, மாநகராட்சி ஆணையர் சி.பிரியங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.