“பிஹார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரால் எந்த தாக்கமும் இருக்காது” – தேஜஸ்வி யாதவ்
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த மாட்டார் என்று மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பிஹாரில் முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்து, இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் வேகமெடுத்துள்ளது. இதன் போது தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தேஜஸ்வி யாதவ் கூறினார்:
“கடந்த தேர்தலில் சிராக் பாஸ்வான் எங்களுக்கு உதவினார் என்று சிலர் கூறினார்கள். இப்போது பிரசாந்த் கிஷோர் எங்கள் வாக்குகளைப் பறிப்பார் என்று சிலர் ஊகிக்கிறார்கள். ஆனால் இந்த விளையாட்டில் நாங்கள் ஈடுபட விரும்பவில்லை. நாங்கள் அரசு அமைக்கப் போகிறோம். பிஹார் மாற்றத்தைக் காணும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது,” என்றார்.
இந்தத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிடும் பிரசாந்த் கிஷோரின் ‘ஜன சுராஜ்’ கட்சி, பிஹாரின் 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. படித்த இளைஞர்களிடையே கட்சி ஒரு அளவிற்கு ஆதரவைப் பெற்றுள்ளதாக கருதப்படுகிறது.
பெண்களின் வாக்குகளைப் பெறும் நோக்கில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் மகா கூட்டணியும் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துள்ளன. இதைத் தொடர்ந்து பெண்களின் வாக்குகள் இத்தேர்தலில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தேஜஸ்வி யாதவ் மேலும் கூறினார்:
“பிஹாரின் இளைஞர்கள் பெரும்பாலும் வேலைக்காக வெளிமாநிலங்களுக்கு செல்கிறார்கள். அம்மாக்கள் தங்கள் மகன்கள் தங்களுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் பிஹாரில் வேலைவாய்ப்பை உருவாக்க நிதிஷ் குமார், நரேந்திர மோடி அரசுகள் தோல்வியடைந்துள்ளன. 20 ஆண்டுகளாக நிதிஷ் குமார் முதல்வராக இருந்தும் இடப்பெயர்வு குறையவில்லை.”
அவர் மேலும் கூறினார்:
“மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். முதல்கட்ட வாக்குப்பதிவிலேயே அது தெளிவாக தெரிந்தது. சாதி, மதத்தை மீறி வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, குற்றமற்ற, ஊழலற்ற பிஹாரை மக்கள் விரும்புகின்றனர். பிஹார் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஜவுளி துறையில் முன்னேற வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில்கள் வளர்ந்து, உணவு பதப்படுத்தல் மையமாக பிஹார் மாற வேண்டும்,” என தெரிவித்தார்.