கல்மேகி புயல் பிலிப்பைன்ஸை தாக்கி 114 உயிரிழப்பு: 127 பேர் காணாமல் போனனர்
பசிபிக் கடலில் உருவான கல்மேகி புயல் பிலிப்பைன்ஸ் நாட்டை கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் 114 பேர் உயிரிழந்ததுடன், 127 பேர் காணவில்லை.
முன்தினம் மத்திய பிலிப்பைன்ஸ் பிராந்தியத்தை கடந்து தென் சீனக் கடலுக்கு நகர்ந்த கல்மேகி புயல், பலத்த காற்று மற்றும் கனமழையுடன் கொந்தளித்தது. இதனால் நீக்ரோஸ் ஆக்சிடென்டல், செபு உள்ளிட்ட மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகளில் இருந்த கார்கள், ஆற்றங்கரை வீடுகள், பெரிய கப்பல் கன்டெய்னர்களும் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த புயல், பிலிப்பைன்ஸ் இந்த ஆண்டில் சந்தித்த மிகவும் கடுமையான பேரிடராக கருதப்படுகிறது. மத்திய பிராந்தியங்களில் பெரும்பாலானோர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.
அதிகாரிகளின் தகவலின்படி, புயலால் சுமார் 20 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே நிவாரண முகாம்களில் 4.5 இலட்சம் பேர் தங்க வைக்கப்பட்டு, மொத்தம் 5.6 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். இதன் மூலம் அரசு அவசர நிதி ஒதுக்கீடு, உணவுப் பொருள் விலை கட்டுப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.
புயலால் செபு மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது — அங்கு மட்டும் 71 பேர் உயிரிழந்ததுடன், 69 பேர் காயமடைந்தனர், மேலும் 65 பேர் காணாமல் போயுள்ளனர். சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திலிருந்து மீண்டுவராத அந்த பகுதி, இப்போது மீண்டும் பேரிடர் தாக்கத்தால் அவதிப்படுகிறது.
இதற்கிடையில், பசிபிக் கடலில் புதிய புயல் உருவாகி, அது வலுப்பெற்று பிலிப்பைன்ஸின் வடக்கு மாகாணங்களை அடுத்த வாரம் தாக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.