வாடிக்கையாளர்களுடன் உள்ளூர் மொழியில் பேச வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள், வாடிக்கையாளர்களுடன் அவர்கள் பேசும் உள்ளூர் மொழியில் தொடர்பு கொள்ளும் நிலையை வங்கிகள் உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் 12வது வங்கி மற்றும் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட அவர், பொதுத்துறை வங்கிகளில் ஊழியர்கள்–வாடிக்கையாளர்கள் இடையே மொழி தொடர்பான பிரச்சினைகள் பெருகிவருவதாகக் குறிப்பிட்டார்.
சமீபத்தில் பெங்களூரில் ஒரு வங்கி மேலாளர், வாடிக்கையாளருடன் கன்னடத்தில் பேச மறுத்ததால் ஏற்பட்ட சர்ச்சையை எடுத்துக்காட்டிய அவர், “இத்தகைய நிகழ்வுகள் வங்கியின் நம்பகத்தன்மையை பாதிக்கின்றன. வாடிக்கையாளர்களுடன் அவர்களின் சொந்த மொழியில் பேசுவது மரியாதையும், நம்பிக்கையும் உருவாக்கும் ஒரு முக்கிய அம்சம்,” என்றார்.
அவர் மேலும், “அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் முறையில் செய்யலாம் என்றாலும், நேரடி வாடிக்கையாளர் தொடர்பு தான் இந்திய வங்கிகளின் உண்மையான பலம். அதனால் வங்கிகள், ஊழியர்கள் வாடிக்கையாளர்களுடன் அவர்களின் சொந்த மொழியில் உரையாடுவதை உறுதிப்படுத்த வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.