ஏஐ போலி வீடியோக்களை தடுக்க டென்மார்க்கில் புதிய சட்டம் கொண்டு வர முடிவு
ஏஐ தொழில்நுட்பம் மூலம் பிரபலங்களின் போலி வீடியோக்கள் பரவுவதால் உலகம் முழுவதும் அதிர்ச்சி நிலவுகிறது. இதனைத் தடுக்க டென்மார்க் அரசு புதிய சட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது.
டென்மார்க்கைச் சேர்ந்த பிரபல வீடியோ கேம் கலைஞர் மாரி வேட்சன் அவர்களின் இன்ஸ்டாகிராம் கணக்கில் சமீபத்தில் ஒரு போலி வீடியோ வெளியிடப்பட்டது. அதில், அவர் நிர்வாணமாக இருப்பது போல காட்சியளிக்கப்பட்டிருந்தது. அந்த வீடியோவை பார்த்த மாரி வேட்சன் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
ஓபன் ஏஐ, கூகுள் போன்ற நிறுவனங்களின் ஏஐ அடிப்படையிலான வீடியோ உருவாக்கும் கருவிகளை பயன்படுத்தி உலகம் முழுவதும் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் மீதான டீப்ஃபேக் (Deepfake) வீடியோக்கள் தயாரித்து வெளியிடப்படுவது அதிகரித்து வருகிறது. இது அவர்களின் புகழுக்கும் தனியுரிமைக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்தச் சூழலில், இத்தகைய ஏஐ போலி வீடியோக்களைத் தடுக்க மற்றும் தகவல் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய சட்டம் ஒன்றை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமல்படுத்த டென்மார்க் அரசு முடிவு செய்துள்ளது.