சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம்: பிரதமர் தலையிடக் கோரி 1 கோடி கையெழுத்து இயக்கம் – பாஜக அறிவிப்பு
சபரிமலை கோயில் தங்கம் திருட்டு விவகாரத்தில் பிரதமர் நேரடியாக தலையிட வேண்டும் என்பதற்காக, 1 கோடி மக்களிடமிருந்து கையெழுத்து பெறும் பிரச்சாரம் தொடங்கப்படவுள்ளதாக பாஜக பொதுச் செயலாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
“சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டில், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையகம் ஏகேஜி மையத்துடன் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்கம் திருடப்பட்ட நிகழ்வு ஒரே நபரின் செயல் மட்டுமல்ல; இதில் சர்வதேச அளவிலான முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்றும் கேரள உயர்நீதிமன்றமே தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் பெரிய அளவில் சதி இடம்பெற்றுள்ளது. திருவாங்கூர் தேவசம் வாரியத்தின் சில அதிகாரிகள் மட்டுமல்லாது, அரசுத் தலையீடும் இதில் உள்ளதாக தெரிகிறது. மார்க்சிஸ்ட் கட்சியால் நியமிக்கப்பட்ட முன்னாள் ஆணையர் பாதுகாக்கப்படுகிறார். அவரை கைது செய்யாமல் முக்கிய குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சி நடக்கிறது.
வழக்கை தற்போது விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு மாநில அரசின் கீழ் செயல்படுகிறது. எனவே இது தொடர்பாக சிபிஐ விசாரணை அவசியம் தேவை. சபரிமலை கோயிலின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசு தலையிட வேண்டும்,” எனவும், இதற்காக ஒரு கோடி பேரிடமிருந்து கையெழுத்து பெற்று பிரதமரிடம் மனு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.