இஸ்ரேல் பிணைக் கைதிகளின் உடல்களை செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் ஒப்படைத்தது
காசாவில் இறந்த இஸ்ரேல் பிணைக் கைதிகளின் உடல்களை ஹமாஸ் அமைப்பு செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவ வட்டாரங்களின் தகவலின்படி, ஒப்படைக்கப்பட்ட உடல்கள் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. இது, அக்டோபர் 10-ஆம் தேதி அமெரிக்கா முன்னெடுத்த மத்தியஸ்த முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு தொடர்ச்சியான முன்னேற்றமாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், ஹமாஸ் 21 இஸ்ரேல் பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்திருந்தது.
இதற்கிடையில், போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டதற்கான சம்பவங்கள் இடம் பெற்றிருந்தாலும், இஸ்ரேல் 15 பாலஸ்தீனர்களின் உடல்களை திருப்பி அனுப்பியுள்ளதாக காசா மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் முதல், இஸ்ரேலிய காவலில் இருந்த 285 உடல்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் காசாவிற்கு கொண்டு சென்றுள்ளது. ஆனால் டிஎன்ஏ பரிசோதனை வசதிகள் இல்லாததால் அந்த உடல்களை அடையாளம் காண சிரமம் ஏற்பட்டுள்ளதாக காசா சுகாதார துறை தெரிவித்துள்ளது.